பயங்கரவாதிகளை ஒழிப்பது பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு முக்கிய நோக்கம் ஆகும். ஆனால் பயங்கர வாதம் என்பதற்கான குறியீடுகள் மாறிவரும் சூழலில் அது மட்டுமே முக்கிய காரணியாக மாறிவிடக்கூடாது.
ஜம்மு-காஷ்மீரில் ரஜோரி- பூஞ்ச் மாவட்டத்தின் தேரா கி காலி(DKG) என்ற இடத்தில் 2024 புத்தாண்டு தினத்தில் நடந்த பயங்கர வாத தாக்குதலில் நான்கு வீரர்கள் கொல்லப் பட்டனர். அதன் தொடர்ச்சியாக நடந்த படை வீரர்களின் எதிர்தாக்குதலில் மூன்று பொது மக்கள் பலியானதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு முழுவதும் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கை குறித்தும் யூனியன் பிரதேசங் களின் பாதுகாப்பு அம்சங்கள் எப்படி பரிசீலிக்கப் படுகின்றன என்பது குறித்தும் காவல்துறை இயக்குநர் கருத்து வெளியிட்டார். அதே நேரத்தில் 2023ஆம் ஆண்டில் துணை ராணுவ படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கர வாதிகளின் எண்ணிக்கை முந்தைய (2022) ஆண்டை விட குறைவாக இருப்பதை ஊடக அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்தது.
இது மிகவும் கவலை அளிப்பதாகும். பயங்கரவாத உள்கட்டமைப்பை ஆய்வு செய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சர் பாதுகாப்புப் படை யினரை அறிவுறுத்துவதாக யூடியூபில் ஒரு வீடியோவும் வெளியானது. பயங்கரவாதிகளை சுட்டுக் கொல்வதும் அதிகரிப்பதாக இது கூறுகிறது.
தவறான நோக்கம், குளறுபடி நடைமுறை!
ரஜோரி, பூஞ்ச் மாவட்டங்களில் கடந்த காலம் மற்றும் நிகழ்காலங்களில் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை மட்டுமே அரசு குறிப்பிடுகிறது. ஒரு வெறித்தன மான வாதத்தின் பயனற்ற தன்மையை இது நிரூபிக்கிறது. கடைசி பயங்கரவாதி கொல்லப்படு வதாக கூறுவது சிறிதும் சாத்தியமற்றது.
இந்த பகுதியில் 1990களின் முற்பகுதி யிலும் 2000 த்தின் பிற்பகுதிகளிலும் பயங்கர வாதிகளின் கிளர்ச்சி உச்சத்தில் இருந்தது. சீருடை அணிந்த வீரர்களின் சிறந்த சேவை, உழைப்பு மற்றும் தியாகத்தால் நிலைமையில் முன்னேற்றம் வந்தது. 2011 -12இல் இந்தப் பகுதி பயங்கரவாதம் இல்லாத பகுதியாக அறி விக்கப்படும் அளவிற்கு முன்னேற்றம் நிகழ்ந்தது. அரசு இயந்திரத்தால் அதனை அதே நிலையில் தக்க வைத்துக் கொள்ள முடிய வில்லை என தெரிகிறது. மேலும் தற்போது அந்த பகுதி மீண்டும் பயங்கரவாதத் தாக்குதலின் படுகுழியை நோக்கி செல்வதை போல் உள்ளது.
பயங்கரவாத எதிர்ப்பு அணுகுமுறையின் தவறான முன்னுரிமைகளால் ஒரு நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. பயங்கரவாத எதிர்ப்புப் பிரச்சாரத்தின் அளவீடுகளாக சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை மட்டுமே அதீதமாக கவனத்தில் கொண்டதாலும் விளம்பரங்களின் வெற்று ஆரவாரத்திலும் ஒன்றிய அரசின் தோல்விகள் மறைக்கப் பட்டுள்ளன என்பதுதான் உண்மை.
அமைப்பை மாற்ற தயக்கம்!
பயங்கரவாதம் தொடர்பான சம்பவங்கள் குறைந்து வரும் பொழுது கிளர்ச்சிகளை எதிர்த்துப் போராடுவது மிகவும் சவாலானது. இது ஒரு முரண்பாடு நிறைந்த சூழலாக தோன்ற லாம். நாய் தான் வாலை ஆட்ட வேண்டும்.ஆனால் இது வால் நாயை ஆட்டுவதை ஒத்த செயலாகும். அதாவது, தனக்கு விருப்ப மான முடிவு கிடைப்பதற்காக சரியான வழிமுறை களை புறக்கணிப்பதாகும். ஜம்மு- காஷ்மீரில் பயங்கரவாதம் தொடர்பான இறப்புகள் ஒரு ஆண்டுக்கு 2000க்கும் அதிகமாக இருந்த போது எண்ணிக்கை என்பது முக்கிய அளவீடாக இருந்தது.
2007 இல் அது குறைந்தபொழுது அரசின் அளவீடுகள் மாற வேண்டும். தெற்காசிய நாடுகளில் பயங்கரவாதம் குறித்த இணைய தளத்தின்( South Asia Terror Portal)புள்ளி விவரத்தின் படி 2023ல் 134 என்ற எண்ணிக்கைக்கு அது குறைந்த பொழுது பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கை கள், அதன் படி நிலையின் (hierarchies )அலகுகள் மற்றும் செயல் திறன் அதற்கேற்ற வகையில் மாற்றி அமைக்கப்படவில்லை. பயங்கரவாத எதிர்ப்புக் களத்தின் இயக்கவியல் மாறியது.அதற்கு ஏற்ப அரசு நிர்வாக நட வடிக்கைகள் மற்றும் மேலாண்மை முயற்சி களை ஒருங்கிணைத்து அமைதியைக் கட்டி எழுப்பி இருக்க வேண்டும்.
ஆனால் அரசு இதற்கு தயார் இல்லை. வரையறுக்கப்பட்ட பதவிக்காலம், குறுகிய நலன்களின் முன்னு ரிமை, பதவிஉயர்வு குறித்த போட்டி, பொறாமை உணர்வுகள் மற்றும் முற்றிலும் தவறான பெருமை உணர்வுகள் ஆகியவை மேலோங்கியதால் இலக்கை எட்டும் வழிமுறை களை பற்றி அரசு பெரிதாய் அலட்டிக் கொள்ள வில்லை.
அப்பாவிகள் மூன்று பேர் உயிரிழப்பு!
பயங்கரவாத எதிர்ப்பு பற்றிய போதனை கள், அதன் தந்திரோபாய நடவடிக்கைகள், உள வியல் ரீதியிலான நடைமுறைகள் ஆகி யவை மக்கள் நலனை மையமாகக் கொண்டு வகுக்கப்பட வேண்டும். மக்களின் இதயங்களை யும் மனங்களையும் வெல்வதை அரசு புறக் கணித்தது.
அரசின் திறன் இன்மையால் மக்க ளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான முயற்சிகள் கைவிடப்படுகின்றன. தீவிரவாதி களுடன் மோதல் நிறைந்த பகுதிகளில் மக்களை மையமாகக் கொண்ட கொள்கைகள் உருவாக்கப்பட்டாலும் செயல்படுத்தும் திறன் இல்லாததால் அரசின் நோக்கம் நிறைவேற வில்லை. விளைவு? அரசின் அலட்சியத்தால் மூன்று அப்பாவி மக்கள் இன்னுயிரை இழந்தனர்.
மேலும் தீவிரவாதிகள் அழிக்கப்பட வேண்டும் என்ற குருட்டு அவசரத்தில் அதிகாரி கள் மற்றும் படை வீரர்களின் உயிரிழப்பையும் சந்தித்துள்ளோம். இந்த உயிரிழப்புகள் முற்றிலும் தவிர்த்து இருக்கக் கூடியவை. இதனால் ஏற்பட்ட அவப்பெயர் பாதுகாப்புப் படைகளின் கடின உழைப்பால் சம்பாதித்த மதிப்பு, பொறிமுறையின் மரபுகள் மீது இருண்ட நிழலை ஏற்படுத்திவிட்டது.
அரசின் செயல்முறைகளில் இடைவெளிகள்!
நமது ஜனநாயக அமைப்பை பொறுத்த வரை தேசம் என்பது மக்களை குறிப்பதாகும். தேசத்தின் பாதுகாப்புப் படை தனது சொந்தச் செலவில் கூட அந்த மக்களையும் அவர்களின் கண்ணியத்தையும் பாதுகாக்க வேண்டும். மக்கள் மற்றும் வீரர்களின் நலன்களுக்கு இடையே உள்ள இடைவெளியை குறைக்க சிப்பாயின் எந்தச் செலவையும் ஈடு செய்வது தான், அப்படி முன்னணியில் நின்று பணி யாற்றுவது தான் ஒரு தலைவனின் தலை மைத்துவம். மக்கள் மற்றும் வீரர்களின் தேவைகளுக்கு இடையில் எவ்வித முரண்பாடு களும் இருக்கக் கூடாது.
அதற்கேற்ப கட்டளை கள் வகுக்க வேண்டும். மக்கள் ஏற்றுக் கொள்வதுதான் சிறந்த முடிவு என்றால் அதை வழங்கிட வீரர்கள் மேற்கொள்ளும் வழிகளுக்கு அரசின் மேற்பார்வை மற்றும் ஒப்புதல் இன்றி யமையாதது. மோதலை நிர்வகிக்கவும், மக்களின் ஒத்து ழைப்புடன் சரியான அரசியல் செயல்முறைக் காக ஒரு நிலையான சூழ்நிலையை அரசாங்கத்திடம் ஒப்படைக்கும் பணியை பாது காப்புப் படைகள் மேற்கொண்டு வருகின்றன. பல நேரங்களில் அவை வெற்றி பெற்ற போதிலும் எந்தவித முன் தயாரிப்பும் இல்லாத, தயக்கமும் தடுமாற்றமும் நிறைந்த ஒரு அர சையே அது எதிர்கொள்ள வேண்டி இருந்தது.
ஜனநாயக உரிமையை இழந்த ஜம்மு - காஷ்மீர் மக்கள்!
2018 முதல் சட்டமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்த ஜம்மு - காஷ்மீர் மக்கள் ஜனவரி 9ஆம் தேதி முதல் உள்ளாட்சி மட்டத்திலும் எவ்வித பிரதிநிதித்துவத்தையும் இழந்து இனி வாழப் போகின்றனர். 9.1.24 அன்று இந்து பத்திரிகை இந்த உண்மை நிலையை முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தி ஆக்கியது. முழுமையான ஒரு அரசாங்க அணுகுமுறை மூலம் ஜம்மு-காஷ்மீர் பிரச்சனையை தீர்ப்பதற்கான செயல்முறையை உருவாக்கும் சாத்தி யக்கூறுகளே இல்லை. இவர்கள் பயங்கரவாதி களை ஒழிக்கலாம். ஆனால் பயங்கரவாதத்தை அல்ல என்பதை இது நிரூபிக்கிறது.
-ஷஷாங்க் ரஞ்சன்.
(முன்னாள் இந்திய ராணுவ அதிகாரி.
ரஜோரி, புஞ்ச் பகுதியில் பயங்கரவாதத்தை எதிர்த்து போராடும் ராஷ்ட்ரிய ரைபிள் அமைப்பில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்.
ஹரியானா,சோனாபட், ஓ. பி. ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்)
நன்றி : தி இந்து, ஆங்கிலம் 15/1/24
- தமிழில்: கடலூர் சுகுமாரன்